உள்ளடக்கத்துக்குச் செல்

ஒசியோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Osceola by George Catlin

ஒசியோலா, தொல்குடி அமெரிக்க இனங்களில் ஒன்றான செமினோலேயின் போர்த் தலைவன் ஆவான். அமெரிக்க அரசு, செமினோலே இனத்தவரை அவர்களுடைய தாயகப் பகுதிகளைவிட்டு வெளியேற்ற முயன்றபோது ஏற்பட்ட இரண்டாவது செமினோலேப் போரில், 100 பேருக்கு மேற்படாத வீரர்களைக் கொண்ட படையொன்றுக்குத் தலைமைதாங்கிப் போரிட்டான். செமினோலேக்களின் அதியுயர் தலைவனான மிக்கானோப்பியிடம் ஒசியோலாவுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.[1][2][3]

பிறப்பும் இளமைக் காலமும்

[தொகு]

ஒசியோலா, 1804 ஆம் ஆண்டு அலபாமாவில் உள்ள தலஸ்சீ என்னும் இடத்தில் இன்றைய மக்கான் கவுண்டிப் பகுதியில் பிறந்தான். இவனது தாயார் பொல்லி காப்பிங்கர் (Polly Coppinger) முஸ்கோஜீ இனக்குழுவைச் சேர்ந்த ஆன் மக்குயீனின் மகள். ஒசியோலாவின் தந்தை ஒரு ஆங்கிலேய வணிகரான வில்லியம் பவெல் (William Powell) எனப் பலர் கூறுகின்றனர். வேறு சிலரோ, ஒசியோலாவின் தந்தையார் தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களுள் ஒன்றான கிறீக் இனக்குழுவைச் சேர்ந்தவர் என்றும், ஒசியோலா பிறந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறுவர். பின்னரே அவனது தாய் ஆங்கிலேயரான வில்லியம் பவெலை மணந்து கொண்டாராம். இதனால் பல ஆங்கிலேயர் இளம் ஒசியோலாவை பில்லி பவெல் என்றே அழைத்து வந்தனர். ஒசியோலா, தான் ஒரு முழு முஸ்கோஜீ எனக் குறிப்பிட்டாலும், அவனது தலை முடி எனக் கருதப்படும் மாதிரிகளைக் கொண்டு செய்யப்பட்ட மரபியல் சோதனைகள் அவன் ஒரு கலப்பு இனத்தவன் எனவே காட்டுகின்றன.

ஒசியோலாவின் தாய்வழிப் பேரனான ஜேம்ஸ் மக்குயீன் (James McQueen) அலபாமாவில் இருந்த கிறீக் (Creek) இனத்தவருடன் வணிகம் புரிந்த தொடக்ககால ஆங்கில வணிகருள் ஒருவர். 1714 ஆம் ஆண்டளவில் அலபாமாவிலேயே தங்கிவிட்ட அவர், அடுத்த பல பத்தாண்டுகளுகளாக ஒரு வணிகராகவும், கிறீக் இனத்தவரின் தலைவராகவும் விளங்கினார். ஜேம்ஸ் மக்குயீனின் மகளான ஆன் என்பவரை ஜோஸ் காப்பிங்கெர் மணந்து கொண்டார். அவர்கள் இருவரதும் மகளே ஒசியோலாவின் தாயார் ஆவார். 1814 ஆம் ஆண்டில் ஒசியோலாவும் அவவது தாயும் ஏனைய கிறீக் இனத்தவருடன் புளோரிடாவுக்கு வந்தனர்.

அரச எதிர்ப்பும், போர்த்தலைவன் ஆனதும்

[தொகு]

1832 ஆம் ஆண்டில் சில செமினோலேத் தலைவர்கள், தமது தாயகத்தை அரசுக்குக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக மிஸ்சிசிப்பி ஆற்றுக்கு மேற்குப் புறமாக உள்ள நிலப்பகுதியொன்றைப் பெற்றுக்கொள்ளச் சம்மதித்து ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர். மிக்கனோப்பி உட்பட்ட ஐந்து முக்கியமான செமினோலே தலைவர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதற்குப் பதிலடியாக, தொல்குடி அமெரிக்கர்களுக்கான அமெரிக்கப் பிரதிநிதியான விலே தாம்சன் என்பான் அத் தலைவர்கள் தங்கள் பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனப் பணித்தான். செமினோலேக்களுடனான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியபோது அவர்களுக்கான துப்பாக்கிகள், அவற்றுக்கான குண்டுகள் என்பவற்றை செமினோலேக்களுக்கு விற்பதையும் அவன் தடை செய்தான்.

ஒசியோலா, ஒரு இளம் வீரனாக வெள்ளைக்காரரால் அறியப்படத் தொடங்கிய காலம் அது. தாம்சனின் நடவடிக்கைகளால் ஒசியோலா கோபம் அடைந்தான். செமியோலேக்களை தாம்சன் அடிமைகளைப் போல் நடத்துவதாக அவன் எண்ணினான். ஒசியோலாவின் மனைவி ஒரு கறுப்பு இனப்பெண். அவன் அடிமைத் தனத்தை தனது இறுதிவரை எதிர்த்து வந்தான். இருந்தும் தாம்சன் ஒசியோலாவைத் தனது நண்பனாகக் கருதி அவனுக்கு ஒரு சுழல் துப்பாக்கியையும் கொடுத்தான். பின்னர், ஒசியோலா குழப்பங்களை உண்டாக்குகிறான் என்னும் குற்றச்சாட்டில் அவனைக் கிங் கோட்டையில் ஓரிரவு அடைத்து வத்தான். விடுதலை பெறுவதற்காக, அரசாங்கம் சில செமினோலேத் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மதிப்பதாகக் கூறி அடுத்த நாளே அவன் வெளியே வந்தான்.

1835 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி ஒசியோலாவும் அவனைப் பின்பற்றியோர் சிலரும் மறைந்திருந்து தாம்சனையும், வேறு ஆறு பேரையும் கிங் கோட்டைக்கு வெளியே சுட்டுக் கொன்றனர்.

ஏமாற்றிக் கைது செய்தமை

[தொகு]
ஒசியோலா. (1838 ஆண்டு அச்சுப்பிரதி)

1837 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, அமெரிக்கத் தளபதி தாமஸ் சிட்னி ஜெசப் என்பவனின் ஆணையின் பேரில், ஒசியோலாவை சமாதானப் பேச்சு வார்த்தைக்கு என ஏமாற்றி அழைத்துக் கைது செய்தனர். அவன் புளோரிடாவில் அகஸ்ட்டீன் என்னும் இடத்தில் இருந்த, மரியன் கோட்டையில் அடைக்கப்பட்டான். இவ்வாறு ஒசியோலாவை ஏமாற்றிக் கைது செய்தமை வெள்ளையர் மத்தியிலும் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது. அடுத்த டிசம்பரில் ஒசியோலாவும் அவனது ஆதரவாளர்களும் தென் கரோலினாவில் உள்ள மோல்ட்ரீ கோட்டைக்கு மாற்றப்பட்டனர். அங்கே ஜார்ஜ் கட்லின் என்னும் ஓவியர் ஒசியோலாவைச் சந்தித்து அவனது படத்தை வரைவதற்கு ஒப்புக்கொள்ள வைத்தார். அங்கே அவ்வோவியர் இரண்டு படங்களை வரைந்தார். இந்தப் படங்களுக்குப் பின்னர் இப்படங்களை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் வரையப்பட்டன.

1838 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி, பிடிபட்ட மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே, மலேரியா நோய் வாய்ப்பட்ட ஒசியோலா சிறையிலேயே மரணம் அடைந்தான். அவர் படைத்துறை மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டான்.

ஒசியோலாவின் நினைவுப் பொருட்கள்

[தொகு]

ஒசியோலாவின் மறைவுக்குப் பின்னர், படை மருத்துவரான பிரடெரிக் வீடன் என்பவர், அவனது தலையை எடுத்துப் பதப்படுத்தி வைத்தார். அவனது முகத்தை அச்செடுத்து வைக்கவும் ஏனைய செமினோலேத் தலைவர்களை உடன்படச் செய்தார். அத்துடன் ஒசியோலா அவருக்குக் கொடுத்த பல பொருட்களையும் அவர் தன்னுடன் வைத்துக் கொண்டார். கப்டன் பிட்கைன் மொரிசன் (Pitcairn Morrison) என்பவன், இந்த முக அச்சையும், பிற பொருட்களையும் எடுத்து வாஷிங்டனில் இருந்த ஒரு படை அலுவலருக்கு அனுப்பினான். 1885 ஆம் ஆண்டளவில் இப் பொருட்கள் சிமித்சோனியன் நிறுவனத்தின் மானிடவியல் சேமிப்புகளுடன் சேர்க்கப்பட்டன. இன்றும் அப்பொருட்கள் அங்கே உள்ளன. மருத்துவர் வீடன் ஒசியோலாவின் பதப்படுத்தப்பட்ட தலையைத் தனது மருமகனான டானியல் வைட்ஹர்ஸ்ட் என்பவருக்கும் கொடுத்தார். அது பின்னர் 1843 இல் நியூ யார்க் மருத்துவரான வலண்டைன் மாட் (Valentine Mott) என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைத் தனது அருங்காட்சியகத்தில் வைத்தார். 1866 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அத்தலை அழிந்து போய்விட்டதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. John K. Mahon (1991). History of the Second Seminole War, 1835–1842. University Presses of Florida. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8130-1097-7. At the time of the Creek War, after the Battle of Tohopeka, his mother took him with her when she migrated to Florida, accompanying a Red Stick band led by a half-breed relative, Peter McQueen.
  2. "Osceola, the Man and the Myths", retrieved January 11, 2007 பரணிடப்பட்டது திசம்பர் 2, 2006 at the வந்தவழி இயந்திரம்
  3. Mahon, John K. (1985) History of the Second Seminole War, 1835–1842, 2nd ed. Gainesville: University of Florida. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0813010977. p. 214: "General Jessup now reached the decision which was to make him more infamous than famous in the eyes of many generations. He decided to persist in his new policy of ignoring flags of truce."
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசியோலா&oldid=4164824" இலிருந்து மீள்விக்கப்பட்டது
pFad - Phonifier reborn

Pfad - The Proxy pFad of © 2024 Garber Painting. All rights reserved.

Note: This service is not intended for secure transactions such as banking, social media, email, or purchasing. Use at your own risk. We assume no liability whatsoever for broken pages.


Alternative Proxies:

Alternative Proxy

pFad Proxy

pFad v3 Proxy

pFad v4 Proxy