போதி மரம்
போதி மரம் (Bodhi Tree) (சமசுகிருதம்: बोधि) என்பதற்குத் தமிழில் அரச மரம் எனப் பொருளாகும். இந்தியாவில் பீகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதிக் கோயிலில் உள்ள அரச மரத்தைப் பௌத்தர்கள் மகாபோதி என அழைக்கிறார்கள். புத்தர் எந்த அரசமரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டு காலம் தியானம் செய்து ஞானம் அடைந்தாரோ, அந்த போதி மரம் தற்போது புத்தகயாவில் போதி மண்டா எனப்படும் மகாபோதிக் கோயிலாகப் பாதுகாப்பாகக் காக்கப்பட்டு, அனைத்துலகப் பௌத்தர்களாலும் புனித மரமாக வணங்கப்படுகிறது.[1]
போதி நாள்
[தொகு]போதி மரத்தடியில் புத்தர் ஞானம் அடைந்த நாளைப் போற்றி நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் எட்டாம் நாளைப் பன்னாட்டுப் பௌத்தர்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.[2]
போதி மர வரலாறு
[தொகு]புத்தகயாவில் உள்ள மகாபோதிக் கோயிலில் அரசமரத்தை மகாபோதி என்பர்.[4] புத்தர் தாம் வாழ்ந்த காலத்திலேயே இப்போதி மரம் பௌத்தர்களால் புனித மரமாகப் போற்றப்பட்டது. பேரரசர் அசோகர் இப்போதி மரத்தை வணங்கியும், அதனைப் போற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் விழா எடுத்தார்.[5] இப்போதி மரத்தை ஒட்டிப் போதிமந்தா எனும் விகாரம் எழுப்பப்பட்டது. பௌத்த குரு சித்தகுத்தா தலைமையில் முப்பதாயிரம் பிக்குகள் இவ்விடத்தில் பௌத்தக் கல்வி பயின்றனர்.[6]
பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் இப்போதி மரம் புஷ்யமித்திர சுங்கன் என்ற மன்னராலும், பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டில் சசாங்கன் என்ற மன்னராலும் வெட்டப்பட்டதாகக் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப்பௌத்தப் பயணி யுவான் சுவாங் தமது பயணக் குறிப்புகளில் குறித்துள்ளார். இப்போதி மரம் வெட்டப்படும் பொழுதெல்லாம் மீண்டும் அதே இடத்தில் புதிய அரச மரம் பௌத்தர்களால் நடப்பட்டு வந்தது.[7]
ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் தொல்லியல் ஆய்வறிஞர் அலெக்சாண்டர் கன்னிங்காம் முயற்சியால் இப்போதி மரம் அமைந்த மகாபோதிக் கோயில் இந்தியாவின் முதல்த் தொல்லியற் களமாக 1862-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.[8]
1876-இல் இப்போதி மரம் சூறாவளிக் காற்றில் அடியோடு முறிந்து விழுந்தது. அலெக்சாண்டர் கன்னிங்காம் அதே இடத்திலேயே புதிய அரச மரத்தை நட்டார்.[9][10]
மகாபோதி மரத்தின் கிளைகள்
[தொகு]புத்தகயா மகாபோதிக் கோயிலின் போதி மரத்தின் விதைகளைக் கொண்டும், போதி மரத்தின் இளங்கன்றுகளைக் கொண்டும் உலகில் பல இடங்களில் புத்தர் காலத்திலிருந்தே அரச மரங்கள் நடப்பட்டன . அவைகளில் சில;
- கௌதமப் புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவரான மௌத்கல்யாயனரால் சிராவஸ்தி நகரத்தில் உள்ள தேஜ வனத்தில் (உத்தரப் பிரதேசம்) மகாபோதி மரத்தின் முதற் கிளை நடப்பட்டது.
- பொ.ஊ.மு. 288-ஆம் ஆண்டில் அசோகரின் மகள் சங்கமித்தையால் அனுராதபுரம், (இலங்கை)யில் உள்ள சிறீ மகாபோதியில் போதி மரக் கன்று நடப்பட்டது.[11]
- சென்னைப் பிரம்மஞான சபைக் கட்டிட வளாகத்தில் 1950-ஆம் ஆண்டில் மகாபோதி மரத்தின் நாற்று நடப்பட்டது.
- அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரப்பகுதியான ஆயிரம் சிந்தூர மரங்கள் (Thousand Oaks, California) பகுதியில் மகாபோதி மரத்தின் நாற்று நடப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
[தொகு]- மகாபோதி கோயில், புத்தகயா
- சிறீ மகாபோதி, இலங்கையில் உள்ள வெள்ளரசு மரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Simon Gardner, Pindar Sidisunthorn and Lai Ee May, 2011. Heritage Trees of Penang. Penang: Areca Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-57190-6-6
- ↑ LeDuc, Sara. "How to Celebrate Bodhi Day". www.doityourself.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
- ↑ Wright, Colin. "A small Hindu temple beneath a banyan tree, Bodhgaya". www.bl.uk.
- ↑ Malalasekera, G. P. (1 September 2003). "Dictionary of Pali Proper Names". Asian Educational Services – via Google Books.
- ↑ "CHAPTER XVII_The Arrival Of The Relics". Mahavamsa, chap. 17, 17.
- ↑ "CHAPTER XXIX_The Beginning Of The Great Thupa". Mahavamsa, chap. 29, 41.
- ↑ J. Gordon, Melton; Martin, Baumann (2010). Religions of the World: A Comprehensive Encyclopedia of Beliefs and Practices, Second edition. ABC-CLIO, Santa Barbara. p. 358. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1598842048.
- ↑ Archaeological Survey of India, Volume 1, Four Reports Made During the Years 1862-63-64-66
- ↑ "Buddhist Studies: Bodhi Tree". Buddhanet.net. பார்க்கப்பட்ட நாள் 2013-08-01.
- ↑ Mahâbodhi, or the great Buddhist temple under the Bodhi tree at Buddha-Gaya, Alexander Cunningham, 1892: "I next saw the tree in 1871 and again in 1875, when it had become completely decayed, and shortly afterwards in 1876 the only remaining portion of the tree fell over the west wall during a storm, and the old pipal tree was gone. Many seeds, however, had been collected and the young scion of the parent tree were already in existence to take its place."
- ↑ "Rain-makers: The Sacred Bodhi Tree Part 2". Srimahabodhi.org. 2003-04-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-01.